Sunday, January 19, 2014

அவன் - அது = அவள்

எழுத்தாளர் பாலபாரதி அவர்கள் எழுதிய ‘அவன்- அது= அவள்’ நாவல். திருநங்கைகளின் மீது மிகுந்த அக்கறையுடனும் மற்றும் அவர்களது அனுதின நகர்வுகளை பொறுப்புடனும் புலப்படுத்தியிருக்கிறார்.  வெறும் வாசிப்பனுபவத்தை மீறி திருங்கைகளின் வாழ்வு மேம்பட  எடுத்த முயற்சி இந்நாவலின் நோக்கமாகிறது. இந்நாவலின் மூலம் திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு பலம் சேர்க்குமென்ற  நம்பிக்கையுடனும்  எழுதி இருக்கிறார். வாசிப்போரிடையே பெரும் மாற்றத்திற்கான சாத்தியம் நிச்சயம். சக தோழிகளாக தங்களை பாவிக்க எண்ணும் திருநங்கைகளின் வாழ்வு மிக குறுகிய காலத்தில் சீராக்க, கவனத்துக்குள்ளாக்கும் படைப்பு.

 திருநங்கைகளின் அனுபவங்களை அவர்களது வாழ்க்கைச்சூழலில் கிரகித்துகொள்ளவே முடியாத, நிராகரிப்பை, அவர்களுக்கு சமூகமிழைக்கும் கொடூரங்களை அடையாளம் காட்டும் பலமிகுந்த எழுத்துரு.  சராசரியாக  தொடங்கப்படும் வாழ்வின் வலிமிகுவான பயணம் திரும்பவும் மீண்டு வரவற்ற பாதையில் தள்ளப்பட்டு தனக்கென்ற ஒரு உலகம் தேடி அலைகின்ற சில ஜீவன்களின் ஒட்டுமொத்த கதறல் முழுக்க முழுக்க உள்ளில் எதிரொலிக்காமலில்லை. திருநங்கைகளின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பாராமுகங்களாய் முளைக்கக் காரணமான   சகமனிதர்களின் அசட்டையும் கேலியும் தொடர்ந்து தரப்படுகின்ற துயரங்களும், அவலநிலைகளும் அவர்களை ஒன்றுமற்றதாக்கி விடுவதன் நெரிசல் நாவல் முழுக்க பயணிக்கிறது. திகிலடையச் செய்யும் வேதனைகளை  எதிர்கொள்ளும் வாழ்வாகிவிடும் திருங்கைகளை மனமுவந்து மதிக்கக் கற்றுக்கொள்ளும் தன்மையை வளர்க்க சிறந்த அறிமுகம் ’அவன் - அது= அவள்’ நாவல்.


சமூகத்தில் திருநங்கைகளை ஒரு விசித்திர படைப்பைப்போன்று கண்காணிப்பதும் பரிகசிப்பதும் இன்னும் நடந்து கொண்டிருந்தாலும் சொற்பமாக ஆங்காங்கே அந்நிலை மாறிக்கொண்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரியதே. பாலியல் வன்முறைக்கு பெரிதும் பாதிக்கப்படுகின்ற  திருநங்கைகள் யாரிடம் முறையிடுவதென்று நினைத்து  பேதலிக்கின்றனர். காவலர்கள் அவர்களிடத்தில் நடந்துகொள்ளும் கருணையின்மை. அங்கீகாரமற்ற பிறவிகளாய் தங்களை நடத்துவதில் வேதனையுற்று தாங்கள் யாருமற்றவர்களாய் கருதுகின்றனர். பல மோசடிகளை செய்து அரசியல்வாதி வழக்குகளை வெகு சாதுர்யமாக தப்பிப்பதும்,  சாமியார்களைக் கொண்டாடி   நடிகர்களுக்கு அபிஷேகமிடும் அல்லது தன்னை சிரமப்படுத்திகொள்ளும் சமூகம், எந்த தவறுமிழைக்காத திருநங்கைகளை அவமதிப்பது வருத்தற்குரியது.  தொடர்ந்து கொண்டிருக்கும்   உரிமைகோரல் சற்று ஆசுவாசமளித்தாலும் முற்றிலுமாய் நிபந்தனகளற்ற சுதந்திரமும்  சக மரியாதையும் அவர்களுக்கு கிடைக்கவேண்டி மனம் பதைக்கிறது. வேலை வாய்ப்புகளை கொடுக்க நிறுவனங்கள் முன் வந்தால் அவர்களது திறமை   மேலோங்கும். எத்தனையோ  கனவுகளை சுமந்து வாழ நினைப்பவர்களுக்கு  அவர்களது நிஜம் பெரும் ரணங்களாகிறது,

எனது மகளுடன் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்குபோது இருக்கை கிடைக்காமல் நின்றுகொண்டிருக்கையில், அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவர் திருங்கை. என்னிடம் குழந்தையை கேட்கத் தயங்கி நானாகவே தருவேனா என்று  என்னையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தாள் . குழந்தையைப் பார்த்து சிரிக்க, அவளும் பதிலுக்கு சிரித்தாள். இரு கரம் நீட்டி அவளை அழைத்தாள் .நான் குழந்தையை கொடுத்ததும் மகிழ்ச்சியில் இருவரும் பேசிக்கொண்டே வந்தனர். தன் பெயர் சுஜி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நிறுத்தத்தில் இறங்கும்போது குழந்தைக்கு  முத்தம் தந்து கலங்கி பிரிந்தாள். வாழ்வில் பெரிதாய் விசேஷங்களோ சுவாரஸ்யங்களோ அற்ற அந்த ஒரு நாள் சுஜியால் நினைவில் நிற்கின்றது. 


இந்நாவலில்  கோபி என்றழைக்கப்படும் சிறுவன் காலப்போக்கின் தன் நிலை உணர, சகோதரியின் உடைகளை அணிந்து கொண்டு தன்னை ரசிக்கத் தொடங்கி, தான் ஒரு பெண் என்பதை சகோதரியிடம் தெரிவிக்கவும் செய்கிறான். நம்ப மறுக்கின்ற குடும்பம் அதை வேறுவிதமாக பூசாரியைக் கொண்டு கையாளுகிறது. மனமொடிந்த கோபி தொடர்ந்து தனக்கு ஆறுதல் தரும் நண்பர்களை நாடுகிறான் . கல்லூரி காலங்களிலும் அவனை பரிகசிக்கும் மாணவர்கள் பரிகாசங்களையும் எதிர்க்கிறான்.‘ஆமாண்டா  நா  ஒன்பதுதான் உனக்கு என்னை மாதிரி ஒரு குழந்தை பிறந்தா தெரியும்டா’   என அவர்களை விரட்டுகிறான்.பிறகொரு தருணம் கூவாகம் செல்கிறான். அங்கு அவன் படும் அதிர்ச்சி, துயரம் கண்களில் நீரை வரவைக்கின்றது. 

பிறர்க்குதவும் நோக்கமும் தாய்மனமும் கொண்ட மற்றொரு திருநங்கையான தனத்தின் அனுசரிப்பில் அவன் கோமதியாகமுற்றிலுமாய் மாறிவிடுகிறான். தான் ஒரு முழுபெண்ணாகியதும் அந்த பெண்மையை காப்பாற்றிக்கொள்ள முனைவதும் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு நடக்கும் அவதூறுகளும் வேதனைகளும்  நீள்கிறது. காதல் திருமணம் செய்ய அபிப்ராயப்படுகின்ற கோமதி, தனத்தையும் எதிர்த்து திருமணம் செய்கிறாள். கணவரது நடவடிக்கைகள் திருமணவாழ்க்கையையும் தோல்வியாக்குகிறது   கோமதிக்கு.

'' நடந்ததை மறந்திடு.. நம்ம வாழ்க்கை இதைவிடவும் மோசமானதெல்லாம் இனிமேதான் சந்திக்க போகுது ‘’ என்று தனம் கோமதியிடம் கூறும்போது தனத்தின் அனுபவமும் அதில் துவண்ட அவளது வாழ்க்கைச்சூழலை உணர்த்துகிறது.
அவளை இச்சமூகம்   தோற்றுப்போவதற்கானவர்கள் என்ற தடுமாற்றத்திற்கு தள்ளி விட்டிருக்கின்றது.

 காதல் திருமணத்திற்கு பின் தனது தோழி சுசீலாவை சந்திக்கும்போது தன் வாழ்வில் கணவரால் பட்ட துன்புறுத்தல்களை  விவரிக்கும்போதும், ‘சந்தேகப்பட்டு உன்னை அடிக்கிறான் உனக்கு கோவமே வரலையா   பேசாம அவனை விட்டு நீ வந்து விடவேண்டியதுதானே’  என்ற சுசீலாவிடம், ‘இதுல கோவப்பட என்ன இருக்கு. என்னை ஒரு பொண்ணா நெனச்சி சந்தேகப்படுறது   சந்தோஷப்படத்தான் வைக்கிது ’  தன் பிறப்புக்கு கிடைக்கப்பெறுகின்ற மரியாதை மாறுபட்டதாக இருப்பினும் அதை ஏற்றுக்கொண்டு போராடத் தயாராகும் மனநிலை  திருநங்கைளின் மீதுண்டான மதிப்பை கூட்டுகிறது.  


ஆரம்பம்   பக்கங்களை கடக்க கடக்க ஏதோ ஒரு இருமை மனமுழுக்க கவ்விக்கொள்கிறது. தெருக்களிலும் பஸ்நிலையங்களிலுமாங்காங்கே அவர்களைக் கண்டிருக்கிறேன். நான் கண்டவரை தங்களை அலங்கரித்துக்கொள்வது தன்னை கவனிக்க விருப்பம் கொண்டே உரக்க உரையாடி கொள்வதும் இயல்புள்ளவர்களாக காட்டியிருந்தது. சக தோழிகளாக எண்ணும் மனநிலை என்றைக்கும் மாறியதில்லையென்றாலும், நாவலின் நோக்கமும் அதன் வழி அத்தனை திருநங்கைளின் வாழ்வை கண்முன்னிருத்தி கலங்கச் செய்கிறது.

 எத்தனை நாகரீகங்கள் வளர்ந்தும் கல்வி பெருத்தும் அறிவுக்கு புலப்படாத இந்த அவலம் குறைய இன்னும் இதுபோன்ற புத்தகங்கள் எத்தனை எழுதப்படவேண்டுமோ. திருநங்கைகள் எல்லாவிதத்திலும் தங்களை தாழ்த்திக்கொண்டு ஒருவருக்கொருவர் சொந்தமாக்கி வாழ பழக்கப்படுத்தி கொள்வதன் வேதனையை உணர முடிகிறது. மனம் இறுக்கப்படுகின்ற நெகிழ்வான நாவல். வெகு எதார்த்தமாக தனம் மனத்தில் பதிகிறாள்.  மிக இயல்பாக  விளங்கச்செய்யும் சீரான எழுத்து பாலபாரதியுடையது.இந்த படைப்பு ஏற்படுத்தும் ஆரோக்கியமான மாற்றம் உறுதியானது. இந்நாவலை தமிழில் கிடைக்கப்பெறாமல் மலையாளத்தில் வாசிக்கவேண்டியதானது. ஜீவன் கெடாத எளிமையான மலையாள நடையில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் ஷாஃபி செருமாவிலாயி . வெளியிட்டிருப்பவர்கள் DC பதிப்பகத்தார் கோட்டயம், கேரளா.  

No comments: