Saturday, December 18, 2010

லில்லினாவுக்காக...

எனது கிராமத்தின் வேர்கள் எனக்குள்ளிருக்கின்றதென
அவள் கூறினாள்.
ஆனால் நான்,

ஏழாவது மாடியில் குடியிருக்கின்றேன்.
வேர்கள் இப்பொழுது ஜன்னலை பற்றி
சட்டி செடியாய் வளர்கிறது.
பழைய குணங்கள் ஒவ்வொன்றாய்
ஒவ்வொரு வசந்தத்திலும்
பூக்களாகிறது.
கண்களின் கருணைகொண்டு
அதீத அழகுபெற்றிருக்கின்றது.
அவையின் சுருண்ட வேர்கள்
நம்மை நோக்கி நீளுகிறது.
அவற்றிலிருந்து வித்தியாசப்படுகின்ற நமது தர்ம சங்கீதங்கள்.
என்னவென்றறியாத ஏதென்றறியாத
ஒரு அந்நிய நாட்டிலிருந்து அப்பா வந்தார்.
குடும்பத்தின் சாயல் அவரில் இழந்துகொண்டிருந்தது.
பரிணாமங்களில் எப்போதுமே ஒரு பிளவுண்டு.
காதலில் பொறாமைப்பட எந்த உரிமையும் எனது நண்பன் தந்திருக்கவில்லை.
குளத்துமீனுக்கு சாப்பாடு மேசையின் மீது இருக்க ஆசை.
முட்டைக்கு யாராவது தன்னை தின்னவேண்டுமென்ற மோகம்.
விரியத் துடிக்கும்
கனவுகளின் அந்தரங்கம் பிளந்த நிசப்தம்.
இறைச்சி துண்டுகளாய் தரையில் நெளிந்து விழும்.
சாமான்கள் சங்கமித்து நிற்கின்றன
பச்சைவிளக்குபார்த்து.
இரவுகளின்
கொடுக்கலும் வாங்கலும் தீர்த்திருந்தது.
இரட்டையர்கள் ஒற்றைகளாய் பிரிந்திருக்கின்றது.
விரகங்களின் பாதையில் தொடர் வண்டிக்கு கீழ்
நசுங்கியிருந்தது
உறங்க முடியாத நிலை தளர்ந்துபோன தெருவீதி
தூக்க மாத்திரை தேடுகிறது.
'தயவு செஞ்சி அழாதே ' அவன் கூறுகிறான்
எனது கிராமத்தில் ஒரு சொல்லிருக்கின்றது
கொஞ்சம் மூத்திரம் சிதற ஆண்களுக்கு
எப்போதும் முடியும்.

மலையாள மூலம் - அய்யப்ப பணிக்கர்
தமிழில் - யாழினி

Monday, September 20, 2010

சஞ்சாரம்

பிரக்ஞைகளை கூடுகட்டி
பெருத்திருந்த
வயிற்றின் தாரைகள்
குறுக்கும் நெடுக்கும்
பலதுமாய்
சுருங்கிக்கிடக்கிறது
மௌனத்தின் மெய்கள்
பதப்படுத்திய
உராய்வுகளின் வெளிச்சம்
பலமாய் பலவீனமாய்
பிறந்து கொண்டிருக்கின்றது
அறை முழுவதும்
அடக்கவியலாத
ஆளுமைகளைக் கொண்டே
ஒவ்வொரு முறையும்
கருத்தரித்து விடுகிறேன்
இம்முறையும்

Thursday, July 8, 2010

நளினி ஜமீலா - புத்தக விமர்சனம்


திக்கற்றவர்களாய் திரிகின்ற பாலியல் தொழிலாளர் கனவுகளின் கரியபாகத்தின் வெளிச்சம்தான் திருமதி நளினி ஜமீலாவின் சுயசரிதை. உணரவியலா உள்வலிகள் ஒன்றுகூடிய வலிமையென தன்னை நிலைப்படுத்தி கொண்டிருக்கும் நளினியின் இப்புத்தகத்தை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த குளச்சல் மு.யூசுப் அவர்களுக்கு நன்றி.

விழியகற்றவியலா ஓயாத ஏமாற்றங்கள் கண் தூவிச்சென்ற உறுத்தலின் கலங்கலில்தான் பாலியல் தொழிலாளர்களின் காலங்கள். எதிர்பார்ப்புகளற்ற வடிவம் வாழ்வாகாது. ஆனால் அவைகள்தாம் அழகையும் அலங்கோலத்தையும் இட்டு நிரப்புகிறது. உள்ளுக்குள் உருண்டு சரியும் அவ்வெதிர்பார்ப்புகள் நுரைகளிளிருந்து தட்டி விழுங்கிய ஒற்றை உருளை மெல்லிய வலியோ வலியொத்த அவஸ்தையோ கொல்லன் துணிந்திருந்த வாழ்க்கையின் தேவையாகப்படுகின்றது.

ஒழுக்கமென்பதன் அரிதாரங்களைப்பூசி தொண்டைக்கிழிய பிரசங்கிக்கும் ஒட்டு மொத்த திரைகளையும் விலக்கி போட்டிருக்கும் பகிர்வு. எனக்குத் தெரிந்து 'அழகிகள் கைது' , 'கையும் களவுமாகப் பிடிபட்டனர்' பத்திரிகைகளில் படித்த ஞாபகம். பிற்பாடு காலங்களில் அச்செய்தியை படிக்காதிருந்தது என் ஒழுக்கத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தவாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

பாலியல் தொழிலுக்கென திட்டமிட்டு தன்னைத் தயார்ப்படுத்தி வந்திருந்தவர்களென்று யாருமிருக்கமாட்டார்கள். தன்னைச் சுற்றி பிரதிபலிக்கும் கருணையற்ற இல்லாமைகளின் உக்கிரம் தருகின்ற உபத்திரவங்களை குறைத்துக்கொள்ள சமூகம் கொடுக்கும் அல்லது சமூகத்துக்கு கொடுக்கும் கண்ணீரே இத்தொழில். காமத்தணிவு."கூலியைச் சொல்லி நான் ஒருபோதும் பேரம் பேசியதில்லை. கேட்ட தொகைக்கு ஒப்புகொள்வதுதான் வழக்கம். மகளை வளர்த்துவதற்கு மாமியார் கேட்ட ஐந்து ரூபாயை அப்படியே ஒப்புக்கொண்டதால்தான் நான் இந்த தொழிலுக்கு வந்தேன் "


தேவைகளுக்கு தட்ட தடையற்ற வீடுகளில் நிரம்பிக்கிடக்கும் காமத்தின் ஆளுமைகள் ஒழுக்கத்தின் பின்னறைகளில் தலைமறைத்து கொண்டிருக்கின்றது. பணத்தை பின்புலமாக்கிக் கொண்டு பருத்திருந்த ஆண்மையின் ரகசியங்கள் ஊற்றி நிரப்பும் கழிவறைகளாகவே கருதப்படுகின்றனர் பாலியல் தொழிலாளர்கள்.

எந்த உறவுகளுக்காக தன் நிஜத்தை மாய்க்கத் தொடங்குகிறார்களோ அவ்வுறவுகளின் தலைமுழுகலில்தான் தடுமாறி களைக்கின்றனர். யாராலும் தீண்டப்படாது ஓடியும் ஒளிந்துமாய் துயரங்களின் அதிர்ச்சியிலிருந்து மீளாத அவ்வுடல்களின் குடி கொண்டு ஊனப்பட்ட உணர்வுகளின் சாயல் வெளிப்பட்டு தோள் சாய்தலுக்கு ஏங்குகின்றனர்.

மர்மமான முறையில் நளினியின் சகப்பாடி அம்முவின் மரண சோகம் படிப்பவர்களையும் கவ்விக்கொள்கிறது.

தற்கொலை என முடிவாக்கி மூடிவிட்டது. எல்லாவித ஆதாரமிருந்தும் ஊகங்கள் சரியாக இருக்கும் பட்சத்திலும் அக்கொலை தற்கொலையாகவே தற்காத்து கொண்டது. எத்துணை குடும்பங்களின் ஆசுவாசமாக வாழுமவர்களை தன் மகளென்றோ சகோதரி என்றோ சொல்லிக்கொள்ள முனைவதே இல்லை. காலக்கடைசியில் அநாதைகளென அடையாளப்பட்டு அடங்கிவிட்டிருக்கும் அவ்வுயிர்.”குழந்தைகளை வளர்ப்பதற்காக நான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். எல்லா தொழில்களையும் போல் இதிலும் சலிப்பு தட்டிய பிறகும்கூட இதில் ஈடுபட்டதும் குழந்தைகளை நினைத்துதான் இப்போது அந்த பொறுப்பும் இல்லாமலாகி விட்டது."


ஒழுக்கவாதிகளின், காவல்துறையினரின் துன்புறுத்தலின் வேண்டுமென்ற துச்சமும் பரிகசிப்பும் வெடித்துப்போன வாழ்வின் மிகப்பெரிய பிளவை மேலும் விரிசலாக்குகிறது. தற்பொழுது உடைந்திருக்கும் ஒவ்வொரு விலங்கின் கண்ணியிலும் துயரின், தனிமையின் தழும்பிருக்கும். எல்லாவற்றிலிருந்தும் வெளியேறவியலாது கட்டுண்ட பிறகு அவ்வாழ்க்கைக்கு சரியான அங்கீகார சொற்ப்பொழிவுகளுக்கு தன்னைத் தயார்படுத்தி பெருமொரு கூடமாய் வலுத்து நிற்கின்றது. அக்கூட்டத்தின் தலைவியாய் இன்று நின்றிருக்கும் அப்பெண்மணி நளினி ஜமீலா கம்பீரம்.

பெருமொரு நீர்க்குவியலுக்கு மத்தியில் பெருத்திருக்கும் பாறையின் உறைவும், வழிநெடுக தடம் தேடியலையும் கூழாங்கற்களின் ஏக்கமும் நின்றுவிடத்தானே. முதலீடாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் பாலியல் தோழிகளின் எதிர்பார்ப்புகள் ஈடேறவும் அதற்கான பிரயாணத்தில் நளினியின் எண்ணம் வலுப்பெற சமூகம் வழிதர வேண்டும்.

அந்தந்த நாட்களின் பின் அவசியப்பட்டிராத நாள்காட்டி துண்டு காகிதங்கள் போல வீசி எறிகின்ற அவர்களின் கோஷங்கள் சீர்படுத்திவிட வேண்டும். அக்கோஷங்களின் தொலைவு குறைக்க ஆவண செய்தல் வேண்டும்.

குற்றமென்று விரட்டப்படுகின்ற இப்பெண்களின் சரிபாதி வந்திணங்கும் ஆடவருக்கும்தானே. முற்றுப்பெறவியலாத இத்தேவையின் ஒழுங்கீனம் ஒழுங்காக்கப்படவேண்டும். பாலியல் தொழிலாளியென சொல்லிக்கொள்ளும் உரிமம் தரப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளும் நளினியின் கூற்றுகளின் குறைபாடேதும் இருப்பதாய் தெரியவில்லை.

கைவிடப்பட்டோ அல்லது கைவிலக்கபட்டோ தடுமாறி உடம்புகளை வாடகையாக்கிக் கொண்டிருக்கும் அவ்விரவு மெர்க்குரிப்பூக்களை தீயிட்டு பொசுக்கி கலாச்சார குளிர்காய அவசியப்படாதிருந்தால் போதுமானது.

மேலும் இப்புத்தகம் பற்றிய மற்ற சில விமர்சனங்கள்...

1.பாதித்தது
2.என் பெயர் நளினி ஜமீலா
3.நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்

Wednesday, July 7, 2010

மூன்று கவிதைகள்

பள்ளத்தில் மீந்திருந்த
மழை நீரில்
மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது
இரு மீன்கள்.
இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர்
மெல்ல வற்றியதும்
இலைகள் சிறகாகி
பறக்கத்தொடங்கியது
மீன்கள்

********

துயரங்களும் துயில்தல்களும்
ஆழத்தளும்பிய நீரில் நீந்துகிறது.
பற்றாக்குறையின் பிரதிபலிப்புகளில்
தன்னைப் பார்த்திருந்த
பரிதி
சடங்குப்பெண்ணின்
சாயலைக்கொண்டு
மூழ்கவெண்ணுகிறது.

********

காத்திருக்கக் கற்றுக்கொண்ட
காலச்சிறைக்குள்
எந்த அற்றத்திலிருந்தோ
நீண்டு வந்த வேரின்
கிளைகளில் முடிந்திருக்கிறேன்
கனவுகளை
அவ்வண்ணமாகவே..

Wednesday, June 30, 2010

குமிழ்ச்சரங்கள்


குரல்வளை அறுத்து
கசியத்தொடங்கியிருந்த
வலியென்பதன்
பெயர் உயிர்
கனன்ற துயரறியாத
திரிதலில் பொதிந்திருந்த
கழிப்பறைக்குள்
கண்ணீரின்
சேகரிப்பும்
சில துளிகளின்
சுத்தீகரிப்பும்
விதைகளற்ற
வெளியெங்கும்
வெள்ளம் பாய்ந்திருக்க
நாகுழறிய
மண்
மண்ணல்ல
மரமோ
செடியோ
முள்ளோ
முடிவில்லாது.

நான் வித்யா - என் பார்வையில்


கோவை செம்மொழி மாநாடு புத்தகக்கண்காட்சியில் லிவிங் ஸ்மைல் வித்யாவின், ”நான் வித்யா" கிடைக்கப்பெற்றேன். படிக்கத்தொடங்கிய முதல் பகுதியே என்னை வாரி சுருட்டிப்போட்டது. சரளமான வாழ்விற்கான ஓயாத வேட்கை மட்டும் புலப்படுகின்றது. .சமூகத்தோடு எதிர்கொண்டிருந்த இரக்கமற்ற பரிகாசங்களின் இறுக்கம் தன்னை எவ்விதம் கலங்கடித்திருக்கின்றது என்பதை தத்ரூபமாக விளங்கச் செய்திருக்கின்றார் வித்யா.

சரவணனுக்குள் பதுக்கி இருந்த வித்யாவை மீட்டெடுக்க பட்டபாட்டின் தடயங்களை கையுருக்கி பகிர்ந்த விவரணையின் விதம் துயரின் குரூரம். மூன்றாம் பாலினத்தை பற்றி முற்றிலுமாய் அறிந்து கொள்ளவிழைந்த ஆர்வம்தான் இப்புத்தகத்தை வாங்கத் தூண்டியதென்றாலும் முடிவில் ஒரு குற்றவாளியென உணர்கிறேன். அழகான அம்முகம். எத்தனை வலிகளைக் கொண்டு வடிவாகி இருக்கின்றது. மாற்றங்களுக்கான தேவையும் தீவிரமும் நிறைந்த பெண்.

அசாதாரண அலங்காரங்களோடு அலட்சியமாய் வலம் வரும் அவர்களுக்கு பெண் உடமைகளோடு இருப்பது மோகமல்ல, அவ்வுணர்வுகளை புரியவைப்பதன் அவசரம்... உரிமை.. அப்படித்தானிருக்கவேண்டும்.'நான் சரவணனில்லையே தவிர மனிதப்பிறவிதான் பூதமில்ல பிசாசல்ல என் புத்தி என்னை காக்கும்'தன்னம்பிக்கையின் சாரமிது. பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் பிணைந்து வளையும் காலம் எத்துணை அவதூறுகளை அள்ளித் தூவுகிறது. ஆழங்காணாத, பாதை கணிக்காத திசையெங்கும் பாறி*த்திரியும் அந்நெஞ்சங்களுக்கு வாழ்வுக்கான எந்த சந்தர்ப்பங்களையும் வழங்க மறுக்கும் இச்சமூகத்தின் இத்தனை பெரிய ஊனத்தை எந்த உலையில் இடுவது. புறக்கணிப்பின் ஓலங்கள் நிறைந்த அறைகளுக்குள் அடங்கியும் அடங்காமலும் வட்டமிடும் அச்சிறகுகளை வெட்டி முறிக்கவோ, காற்றுகளை அவ்வறைகளுக்குள் இல்லாமலாக்கவோ என்ன உரிமை இருக்கின்றது. வருணிக்கவியலா வலியில் சரவணன் பெற்றெடுத்த வித்யா திருநங்கைகளின் பொக்கிஷம்.

பரிகாசம் பட்டவிழ்கின்ற நீர் கோர்வைகளின் நீளம் நிறுத்தவாகினும் குறைக்கவாகினும் என்ன செய்ய..?

கூர் கூராகி சிதறிய காயம் மெல்ல மெல்ல வடுவாகிய வேளையில் வெளிப்பட்டிருக்கும் இப்பகிர்வு நம் நெஞ்சத்தின் தீரா காயமாக கண்ணிக் கிடக்கின்றது. எத்தனையோ திருநங்கைகளின் கண்ணீரில் ஒற்றைத்துளி வெளிச்சம் வித்யா. இனி அவ்வெளிச்சம் குறைவதில்லை என்னபதுதான் பலம்.

மனித நேயத்தின் சாயல் முறிந்த மரணத்தின் நுனிக்காம்பில் தொங்கியபடி வாழ, கையேந்தும் ஜீவன்கள் செய்திருந்த குற்றமென்ன? இடுக்குகளில் தனக்கென்று உருவாக்கிய உறவுகளோடு சுகமென்பதாய் சிரித்தும் அழுதும் களைக்கும் அவர்கள் ஒடுக்கிப் போடும்படி எந்த தேசத்துக்குத் துரோகம் இழைத்தனர்?

மனிதமற்ற ஒவ்வொரு ஜீவனும் மனிதனுக்கு ஒப்பற்றதல்ல. வீடுகளின் அத்தனை துவாரங்களையும் அடைத்து "நிஜம்"-ங்களுக்கு உச்சுக்கொட்டி உறக்கமிருக்கும் அறைகளில் தன்னைப் போர்த்திக் கொள்ளுபவர்களிடத்தில்தான் தொலைந்து கிடக்கின்றது வழியற்றவர்களின் உறக்கமும்.

சரியான அங்கீகாரமோ ஓதுக்கீடோ திருநங்கைகளின் அன்றாடத்தை மட்டும்தான் நிரப்பும், இச்சமூகத்தின் ஒட்டுமொத்த புறக்கணிப்பும் சிநேகத்தின் கையசைவுகளாய் மாறும் பட்சத்தில் அல்லாது ஒரு விடியலில்லை.

இயற்கையின் வித்தகத்திற்கு யாரும் யாரையும் தண்டிக்க வலுவற்றவர்களே. உடைந்த நெஞ்சங்களின் ஒன்றுபட்ட உருவமாய் உயிர்த்திருக்கும் வித்யாவைப்போல இனியொரு பகிர்வுக்கு வழிவகுக்கலாகாது.
முற்று செய்ய என்ன செய்யப்போகிறோம்?

பிரபஞ்சத்தில் வாழத்தகுதியற்றவர்களாய் யாருமில்லை. அன்பின் வெளியியல்தான் வாழ்வுக்கான நியதி.


வித்யாவின் இந்தப் புத்தகம் இச்சமூகத்தை சற்றேனும் புரட்டிப்போடும் கூர் ஆயுதம். இத்தரிசனமுணர்ந்தவர்களின் மனத்தில் சற்றேனும் ஈரமிருக்கும். பரிதாபங்கள் தீர்வாகாது. முன்வருகை சரிசமமான பயணம் மட்டும்தான் அவ்வாழ்க்கைக்குச் சீர். இச்சமூகத்தின் கீழ்மையை உயர்த்த, சரிக்கட்ட யாரோவல்ல... நாமே முயற்சிக்க வேண்டும். வெளிச்சத்தின் ஒற்றை கீற்றாய் தியானித்திருக்கும் வித்யாவின் இப்படைப்பு இதயத்தின் சுவாச சுருக்கங்களை இறைக்கச்செய்கின்றது.

***
*பாறி - மலையாள சொல். இதற்கிணையான தமிழ்ச்சொல் தெரியவில்லை. காற்றில் பறக்கும் தூசி போல அல்லது காற்றின் திசையில் மிதக்கும் இறகு போல சொல்ல நினைத்தது.

Saturday, June 19, 2010

சாரங்களின் நிசப்தம்

ஒற்றைபட்டு சாய்ந்த
நிழலின் நிலமெங்கும்
இருட்டுக்குமொப்பாத
சாம்பல் நிற
மண்ணினாலான பூமி
கவிழ்ந்திருந்த முகத்தை
கிளைத்து
பசிக்கு துழாவி
கொத்தத்தொடங்குகிறது சேவல்
அரூபங்களின் துயர் தீராபொழுதில்
சொற்ப வார்த்தைகளை
கொண்டொரு பிரயாணங்களின்
மீந்து நின்ற கவிதைகளில்
சில பரிவில்லாது
தொண்டைக்குள் அடைபடுகிறது
சுவடுகளை அழித்திருந்த காற்றுதான்
என்னையும் இல்லாதாக்குகிறது.
அணைத்த மெழுகின்
அவஸ்தை விளம்பித்திரிகையில்தான்
அறிந்திருந்தது அதனின் ரூபமும்

Sunday, May 23, 2010

நீயற்றதொரு விபத்தாய்


அந்தரத்தில்
பாதை கோர்த்து
பயணித்திருந்த
சிலந்தியின்
கிளைகள்
உந்தி உயர்ந்து
கனவுகளை
ஆழக்கருமைகளாக்கி
தரை இறக்கியது
இலைகள்
இறகுகள்
இதயங்கள்
உறவுகளோடு
உணவு கண்ட
ஈக்களும் மொய்க்கும்
வனமெங்கும் இல்லை மரம்
ஒன்றுமற்ற பொழுதாகினும்
உறுத்துகிறது உன் வருகை.

Friday, March 26, 2010

பெயர்க்கவற்ற அகண்டவெளி

துயர்க்கூடி
முதிர்ந்திருந்த
இரவின் வேர்த்தேடி
பயணித்திருந்த இலைகள்;
துழாவி தூர்க்கவியலாது
நிலமெங்கும் வியாபித்திருந்த
நரம்புகளைக்கொண்டு
சிவப்பாலும்
பச்சையாலும்
சுயாதீனமாய்
உயிர்க்கவற்ற விளக்குகளில்
சுருண்டுடையவிருக்கும்
ஒளிக்கு வண்ணமீட்டுகிறது.
வேறொருவருக்கும் உதவாத
வெற்று வெளிச்சங்களின்
அசூயைக்கொண்டு
கருகிய இலைகள்
வெகுநேரம் கூவியும்
வெளிவராத
வீட்டுடைமைகளை
சலித்த யாசகனாய்
வஞ்சனைகளின் பிரதிபலிப்புகளில்
தன்னை இறுக்கி
இலை சேர்த்துக்கொண்டிருக்கின்றது
மரம்.

Monday, March 22, 2010

வெளிப்படுகை

தயையற்ற நரம்புகளில்
பயணப்படத் தொடங்கியது
விழுந்து வேர்கொண்டெழுந்த மழை;
அமைதியற்ற நிலையில்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
சிந்தியவை
கவியும் மௌனவெளியில்
உடலிழந்த நிர்வாணத்தில்
மடிப்பு கலையாத ஆடையாகி
அந்தப் பொழுதின் அந்திமத்திற்காய்
காத்துக்கிடக்கையில்
கருவுற்றிருந்தேன்
புடைத்த வயிறு தடவுகையில்
விரல்களில் ஒட்டிக்கொண்ட
துளிகளில் சில
வசீகரம் நிறைந்த
பின்னிரவுகளின்
பூரணம் நிலவாகிக் கொண்டிருப்பதை
குறைகூறி
விழுங்கிய காமத்தை
உமிழச்சொன்னது
மார்புகளில் ஒற்றிக்கொண்டிருக்கும்
வெள்ளைக்குருதி சட்டென
மூத்திரமாய்
ஒற்றை துளி வடிய
சாதுர்யமாய்
உறைந்துவிட்ட உயிரொன்று
அன்னியப்பட்டு
கரை ஒதுங்குகிறது.

============

(இம்மாத அகநாழிகையில் எனது கவிதையைப் பிரசுரித்த ஆசிரியர் குழுவினருக்கு நன்றிகள்.)

Saturday, February 27, 2010

பிரகடனத்தூரிகைகள்

தவறவிட்டிருந்த
உன்னதமானதொரு
காதல்
வந்த பாதையறியாது
சுழல்கிறது
அவனிடமிருந்து அவளுக்கும்
அவளிடமிருந்து அவனுக்கும்
தனித்த தூரிகையின்
ஓவியப்பிரகடனத்தை
புரிபடாது

பிளவுபட்டிருந்த
சுவற்றுக்குள்
பல்லாயிரக்கணக்கான
எறும்புகள்
தன்தீனிக்காதலை
சுமந்து
அந்தரவெளியில்
அலைந்து தனதேயான
இணைத்தேடி
பிடிக்கின்றது

காமம் தணித்த
எறும்புகளில் சில
தாங்கொணாத்துயரத்தில்
அவனும்
அவளுமாய்
திரும்புகின்றது அள்ளப்பெறாத
காதலோடு

Wednesday, February 17, 2010

மண் மூடிய வேர்கள்

தொடர் பதிவை எழுத அழைத்த முத்துக்காவுக்கு நன்றி.

எழுதப்பட்டிருக்காத நிஜங்களை நினைவுகளில் தேடித் திரிகையில்தான் எவையெவைகளையெல்லாம் கடந்திருக்கிறோமென்பதும், வாழ்வியல்பென வதங்கி ஒதுங்கிய அந்நினைவுகள் சொல்லித் தந்திருப்பதும் வாழ்க்கையைத்தானென்பதும் புரியத்தொடங்குகிறது.

டயரி எழுதும் எண்ணம் பெரிதாக இருந்தாலும் எழுதும்படியான நிகழ்வுகளின் தொகுப்பு வசியமற்றதாகவே இருந்தது. எழுதுவதைப் பற்றி என் ஆசிரியர் சிதம்பரம், 'ஏண்டா முடிஞ்சிபோன விஷயத்த எழுதுறிங்க. திட்டங்களை எழுதுங்க. குறிப்பிட்ட அந்த நாளில திட்டத்தோட எந்தப்பகுதில இருக்கிங்கனு பாருங்க' என்றிருந்தார்.

இன்று வரை எந்தவிதமான திட்டங்களோ, நிகழ்வுகளோ எழுதப்படாமல் நண்பர்களின் முகவரியை சுமந்தே எனது டயரிகள் கிடக்கின்றன.

பதின்ம வயதுகள்.... வண்ணத்துப்பூச்சிகளின் சிறகிலேறி வட்டமடிக்கும் நாட்கள். எந்தத் துயரமும் துருவி போட்டிராத கணங்கள். என்னொத்த வயதுகளில் தத்தம் குடும்பத்துடன் குதூகலித்து கொண்டிருந்தாலும் அந்தத் தோழமைகள் நினைவுகளில் மின்னி மறைவது ரெட்டை சடை முகங்களாகவே.

”விதவையான ஏடுகளை
கண்டால் முத்தமிட்டு
மறு வாழ்வளிக்கும் எங்களின்
பேனாக்கள்”

எனது கணக்கு நோட்டில் எழுதி இருப்பதை பார்த்து ஜெயா, ”ஏய்! இங்க பாருடி. இவ கவிதை எழுதி இருக்கா”

முதல் பெஞ்சில் தொடங்கி ஒட்டுமொத்த அறுபது மாணவர்கள் உதடுகளிலும் முணுமுணுத்து ஆசிரியர் வரை சென்று உற்சாகப்படுத்தி, அளவற்ற திளைப்புகளில் களித்திருக்கச்செய்த அந்நாள் தொடங்கி ஆர்வக்கோளாறில் எழுதத் தொடங்கி இருந்தேன். சில கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்தது. தோழிகள் கூடத்தில் சிறப்புத்தகுதி பெற்றவளாய் மதிப்புற்றிருந்தேன்.

பள்ளிக்குள் முதலில் வருவது நானும் ஜெயாவும்தான். அவள் என் நெருங்கின தோழி.

அடர்த்தியான சலசலப்புகள் ஒருமித்த குரலை வெளிப்படுத்துகிற வகுப்பறைகளில் யாருமற்ற மௌனம் பிடிக்குமெனக்கு. வளாகம் முழுவதுமாய் உதிர்கின்ற இலைகள் நிரம்பிய, இரண்டுக்கும் அதிகமான கிளைக்கைகளை கொண்டு அப்பள்ளியை முழுவதுமாய் அணைக்க முயன்றபடியே, ஆண்டுகள் பலவாகி நீண்டு கொண்டிருந்தது அம்மரம்.

வேனல் காலங்களில் உஷ்ணமும் நெருக்கமும் கொப்பளிக்கின்ற வியர்வைக்கு பயந்து, ஸ்டெல்லா டீச்சர் பெரும்பாலும் அம்மரத்தடியில் பாடம் நடத்துவார். ஜில்லென வீசும் அக்காற்றில் துவைந்த தேகம் சிலிர்க்கும். ஸ்டெல்லா டீச்சர் அழகான பெண்மணி. அலங்காரமும் விதவிதமான சேலைகளையும் ரசிக்காத நாளில்லை. பாடத்தை கவனித்திருப்பது தவிர்த்து மரத்தினின்று இயல்பாய் விடுபடுகின்ற இலை எண்ணுவதும், அவ்விலைகளை முன்னமர்ந்திருப்பவளின் சடையில் திணிப்பதும், மண்ணில் கோலமிட்டு கலைப்பதுமாய் கடந்திருக்கும் வகுப்பு. பெருத்து அகன்றிருக்கும் மரத்தின் நிழலோடு எனது சிநேகம் புத்தகத்தில் பதுங்கிய இலைகளுக்கே தெரிந்திருக்கும்.

அது ஒரு கிருத்துவ பள்ளி. வகுப்புகள் அதிகப்படுத்த வேண்டுமென்ற அறிவிப்புக்கு பின்னொரு நாளில் மரத்தை வெட்டத் திட்டமிட்டு, கோடாரி கொலை செய்ய நாளும் குறிக்கப்பட்டது. ஒரு சனிக்கிழமையில் வெட்டுப்படுகின்ற சத்தம் கேட்டு அதிர்ந்தது என்னை போலவே மரமும். ஜன்னலோரமமர்ந்து கண்முன் வன்முறையொன்று நடக்க பார்த்திருக்கும் படபடப்போடு நிம்மதியற்று அழுதேன். முறிவின் அகோர கதறலுக்கு மத்தியில் உடைந்த முட்டைகளுக்காய் பிறண்டு அழும் சிட்டுக்குருவியைப் போல துடித்திருந்தேன். அதீத பிரியங்களை மறுத்திருந்த அந்நிலத்தில் முளைத்திருக்காதிருந்திருக்கலாம்.

ஊன்றி உயிர்த்து தீராத வேட்கையோடு தந்த நிழலின் தேவை என்றைக்கும் நிறைவுறாது. நிலம்பற்றி கிளைத்த அம்மரத்தின் ஆயுள் அறுக்கபடுகின்றது. சாய்ந்து தளர்ந்து நிலம் பற்றிப் பிடித்திருந்ததா இல்லை வேர்கள் அந்நிலத்தைப் பற்றி படர்ந்ததா. வெகுநாளாக என்னை உலுக்கிய விபத்து அந்த மரத்தின் மரணம். யாருடைய பயணத்திற்கும் விருப்பமானதொரு கையசைவை தந்து கொண்டிருந்த இலைகளின் கைநீட்டல்களுக்கு தாவிச்செல்கிறது மனம்.

தோழிகள் கேலி செய்திருந்தனர். ஜெயா மட்டும் என்னை சமாதானப்படுத்த முயன்று ஸ்டெல்லா டீச்சரிடம், ”எப்பப் பாத்தாலும் அதையே பேசி கஷ்டப்படறா டீச்சர். சொன்னா கேக்கவே மாட்டேன்றா”என்றாள். நான் எதுவும் பேசாதிருந்தேன்.

அன்று மாலை வகுப்பு முடிந்ததும் ஸ்டெல்லா டீச்சர் என்னை அழைத்து, ”ஏண்டி இந்த மரம் போனா அதுக்காக அழறதா. இன்னொரு மரம் உன்னால முடிஞ்சா நடு''' என்றார். சற்று ஆசுவாசமாயிற்று. மறுநாள் வேப்பங்கன்று ஒன்றை பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஓரமாக நட்டு, தினமும் கவனித்து வந்தேன். அது மெல்ல தன் ஜீவனை நிலைப்படுத்திக் கொண்டிருந்தது. பள்ளி படிப்பு முடிந்து சக தோழிகளை பிரிகையில், அம்மரம் பூப்படைய காத்திருக்கும் பெண்ணொருத்தியின் சாயலில் மிளிர்ந்திருந்தது.

இனி யாரும் அதை தட்டிக் கொடுத்து வளர்க்கவேண்டிய அவசியமிருக்காது. வெட்டி முறிக்காதிருந்தாலே போதுமானது என முத்தமிட்டு விலகினேன்.

எத்தனையோ வருடங்களுக்கு பிறகு ஜெயாவை ஒரு மருத்துவ மனையில் சந்திக்க நேர்ந்தது. தடித்திருந்தாள். இரண்டு குழந்தைகளோடு உறவினர் யாரையோ மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கூறினாள். மற்றத் தோழிகளைப் பற்றி விசாரிக்கையில், சட்டென அந்த வேப்பமரம் இலையுதிர்த்து சென்றது. அந்த பள்ளிக்கு அருகிலேயே அவள் வீடு. ”இப்பவும் ஏதாவது எழுதுறியாடி. அப்புறம் நீ வச்ச மரம் ரொம்ப பெருசாயிடுச்சுடி”

அந்த மரத்தில் முன்னாள் மாணவியென்று எனது பெயரைத் தாங்கியபடியும் இன்னும் சில மரங்கள் நடப்பட்டு அதில் அந்த வருட மாணவிகளின் பெயரை எழுதி இருப்பதாகவும் சொன்னாள்.அவள் மகள் அந்த பள்ளியில்தான் படிப்பதாகவும் உன்னைப்பற்றியும் அந்த மரத்தை பற்றியும் அவளிடம் அடிக்கடி பேசுவதாகவும் கூறினாள்.

”அதெல்லாம் ஒரு காலம்டி" அந்த வார்த்தையில் தற்போதைய வாழ்விற்கான சலிப்பு அடைபட்டிருந்தது.

உள்ளத்தில் உருபெற்று அகண்டு பெருத்திருந்த அம்மரம் நிலத்தில் நிலைத்திருப்பது ஆனந்தமாக இருந்தது. எல்லாமும் மாறிப் போயிருந்த சூழலில், என் வருகைக்காக காத்திருக்கும் அதே இரண்டுக்கும் மேற்ப்பட்ட கைகளோடு. மனம்கொள்ளாது ஊடுருவிய வேர்களோடு அழுந்துகிறது நிர்பந்தமற்ற நேசம். மெல்ல உதிர்கின்றது. மெல்ல துளிர்க்கின்றது. எத்தனையோ நினைவுகளிலிருந்து தனித்திருந்த இந்த நிகழ்ச்சி மனத்தின் மாறாத பருவகாலம். அதே பள்ளியில் இன்னும் மாணவியாகவே எனை சுமந்தொரு மரம் காத்திருக்கின்றது. அடித்துப் பெய்த மழையில் நீரற்ற கிணற்றுக்குள் மெல்ல குவியும் பச்சயம் போல என்றும் என்னுள் ஈரமாகவே இந்நினைவுகளிருக்கும்.

பதின்ம நினைவுகளினைத் தொடர கவிஞர். திருமதி லாவண்யா சுந்தரராஜனை அழைக்கின்றேன்.

Wednesday, February 10, 2010

ப்ராப்தம்

மூங்கில்
இடுக்கினூடே
பற்றிப் பிடித்த கரையான்
அசுவாரசியமற்று
பணித்த பாதையிலேயே
திரும்புகிறது
அரித்துப்பிளந்த
அம்மூங்கில்
மெல்ல முறிய
குற்றமற்றதொரு
மரணம் நிகழ்கிறது

Saturday, February 6, 2010

தொடர்வினை

தொடர்ந்திருந்த நெடுந்துயரத்தை
வெகுநாளாய் மறந்திருக்கிறேன்
என்பது நினைவில் வர
தணல் தரை நோக்கி
சாடித் தெறித்தவைகள்
ஒழுங்கற்று பரவத் தொடங்கியதும்
விளிம்புகளுக்கப்பால்
நேசிக்கப்படவிருந்த
இதயத்தினின்று வலிகள்
தன்னை தளர்த்தி
விலகியிருக்க
அதற்கான கூடொன்றை
நிர்ணைத்த மரமொன்று
அழுத்தம் கூட்டி
ஆகச்சிறு கல்லறைக்குள்
நசுக்கிப் போட்டதில்
இற்று துண்டாகி விழுந்த
சதைத் துணுக்குகள்
வலியையோ
பசியையோ உணராது
முழுவதுமாய் ஜீவனற்ற
அவ்வாழ்வின் பொருள் தேடி
அலைகிறது
மதபோதகனின் சொற்களைப்போல
அந்தரத்தில்..

Thursday, January 28, 2010

வெறுமை

வீதி வீதியாய்
அலைக்கழிகின்ற
தீரவியலா துன்பத்தின்
நெரிசலில்
சிக்குண்டு விடுபட்ட
மாமிசச்சிலையின் பசி
சில பருக்கைகளில்
தீர்ந்திருக்கும்
தன் வசமிழந்து
பொழிகின்ற மழையின்
தீண்டலில்
உதறி எழுகின்ற
விளைச்சலென
விண்ணையும்
முட்டும்
சோக விருஷ்டம்
அதன் உக்கிரத்தை
தூவி இருந்தது
முகம் சுளித்து
பற்றில்லாமல்
பயந்து நகர்கின்ற
பருவ பெண்களையோ
கடை முன் கையேந்தும்
பசியையும்
மதுரங்களில் படபடக்கும்
ஈயையோ
ஒரு சேர விரட்டும்
கைகளுக்கோ
மீந்த உணவு
சிறு பாலிதீன்
பைகளில் திணித்து
தருகின்ற
இரக்க மனதுகளுக்கோ
அவள் இளைத்திருக்கவே இல்லை
வழியெங்கும்
விரிந்து கிடக்கிறது
அவளுக்கான பிரயாணம்..

Saturday, January 16, 2010

மீண்ட உயிர்ப்பு

அரைஞான் கயிற்றுக்குள்
அடைப்பட்டிருந்த
அரைக்கால் சட்டை துவாரங்களில்
தெரியும் நிர்வாணம்
வறண்ட தசை புறமெங்கும்
வழிகின்ற உதிரம்
துளி பிரக்ஞைகளேதுமின்றி
மெல்ல சொல்லட்கரிய
வார்த்தைச்சாவிகளோடு
மென்காற்று மண்டலங்களை
காலம் உள் நுழைக்கின்றது.
ஆடை துவைத்துக்குளித்த

அகண்ட இரவில்
மௌனமாய் நகர்த்தப்பட்டிருந்த
கனவு பரிமாறிய முத்தத்தில்
மடிந்த நாவின் நீளம்
உன்னெட்டும் தூரம்
துழாவி
அடிவயிற்றில் அழுந்திய ரேகைகள்
முடிந்திருந்த ஒற்றை தின பயணத்தைச்
சொல்ல முயல்கையில்
கட்டியெழுப்பியசாரைத்தூண்களென
விம்மி தளும்பிய தேம்பல்கள்.
உன் தேகம் நனைத்த

நம் இருத்தல்களையும் நிரப்பிய
தீர்க்கமானதொரு கணத்தில்
ஆள்துயரங்களனைத்தும்
அவ்வறை ஓரங்களில்
இளைப்பாறியது
புதருக்குள் மறைத்திருந்த
நிராசைகள் ஒவ்வொன்றாய்
கொத்தி தின்ற காகம்
களைத்து
வெள்ளை வெளிச்சம் தெளிகையில்
பிரம்மாண்டமானவிரு
கருத்த சிறகுகள்
முளைத்திருக்கக்க‌ண்டேன் முதுகில்.
இன்னும் நான் மரித்திருக்கவில்லை.

Tuesday, January 5, 2010

பிரபஞ்சம்

அனாதை பிணமொன்று
அன்று காலையில்தான்
புதைக்கப்பட்டிருக்கவேண்டும்
தூவிய மலர்களுக்கு
இன்னும் மரணம்
விதிக்கபட்டிருக்கவில்லை
சடலக்குழிகளுக்குள்
வளர்க்கின்றது
தலைமுறையை
உடன் சில புற்களும்

Sunday, January 3, 2010

கிரகப்பிரவேசம்

புழு தின்ற இலையில்
விடுபட்ட பாகம்
சிறகாகி வட்டமிடும்
வெளியெங்கும்
ஊருக்கு ஒதுக்குபுறம்
கடத்தப்பட்ட
காலம் கடந்துபோன வீடு
எச்சத்தில்
விழுந்த தானியம்
உலைக்குள் உருகி
பிழைத்தது பசியற்ற
வற்றுகளாய்
பொய்த்திருக்கும் புதர்களுக்குள்
விபச்சாரிகளின்
அழுகையில்லாத மௌனம்
மறுபடியும் விதைக்கப்படுகின்றது

குதிருக்குள்
ஊர் செய்ய...