Tuesday, December 22, 2009

தொடர் குறிப்புகள் - 2

காற்றுடைத்து
கடந்து செல்லும்
வாகனம்
பின்வரும் புழுதியாய்
கண்ணுறுத்தி செல்கிறது
உன் நினைவு

Saturday, December 12, 2009

தொடர் குறிப்புகள் - 1

பிரியங்களினால்
தட்டப்பட்டிராத
எனது அறைக்குள்
அத்து மீறி நுழைகிறது மழை
அவன்வீட்டிலும்
அதுவாகவே நுழைந்திருக்கும்
மணல்மேட்டுத் துவாரங்களில்
கைக்கோர்த்து சிரித்த
காதல் தினத்தை மீண்டுமொரு
கோபுரமாக்கி இருக்கும்
இன்று நான் சாவகாசமாய்
நனைய முடியாத இந்த மழை

Thursday, December 10, 2009

காத்திருப்பு

திட்டமிட்ட ஒரு நாளில்
உன்னை சந்திக்க
சேர்த்திருக்கும்
புன்னகைகளில்
உடைபடலாம்
ஒரு அழுகையும்

காதல்

அகால மரணம்
அழுத்தம் குறையாத வீடு
அழுதாலென்ன
சிரித்தாலென்ன
புறக்கணிக்கவியலா
சிரத்தையோடு
அணைக்கப்படுகின்ற
சின்னஞ்சிறு மழலையென
மெல்ல
ஒரு காதல் உயிர் கூடுகிறது.

முறிதற்காலம்

வார்த்தைச்சுருக்கமொன்றில்
வைத்துவிடத் தவறிய முற்றுப்புள்ளி
முற்றத்தில் கிடக்கிறது
ஆடு வெட்டிக் கூடிக்கும்பிட
அடர்த்தி கூடிய
அமாவாசை இருட்டை
தேடி சொல்லிற்று

வந்து சேர வழியறியாது
வராது போனவர்கள் இன்னும்
வந்து சேர்ந்திந்திருக்கவேயில்லை
வழிநெடுக கால் இடறி
காயாத உதிரக்கறைகள்
கற்களில் இன்னும் உறைந்தபடியே

வெறிச்சோட்டம் பாய்கின்ற தனித்திருப்பில்
அதிர்ந்தெழுந்த நாட்கள்
பொட்டு வைத்து
வெட்டப்பட காத்திருக்கும்
வெள்ளாடென
கட்டிக்கிடக்கிறத
காணவில்லை
முற்றுப்புள்ளியை

Tuesday, December 8, 2009

பெரிதொரு மழைக்காதல்

வெகுநீண்டகாலமாய்
கண்கள் முட்டுவதும்
காதல் பேசுவதும்
கருத்துக்கள் மோதுவதும்
பெரும் சத்தங்களோடு
கலைந்து போவதுமாய்
இந்த மேகங்கள்

நிலம் நனைத்த
துளிகளுக்குள்
என் விழிநீர் சிலதுமிருக்கும்
அவைகளில் கொஞ்சம்
விளை நிலமொன்றுக்குள்
விழுந்திருக்கலாம்

இரு நெல்மணிக்கதிர்களாகவோ
பாகையாகவோ
அல்லது பழங்களாகவோ
பதமில்லாது முளைத்திருக்கலாம்

உணர்வுச்செத்த தருணமொன்றில்
உன் புணர்வு ஒருபோதும்
நேசத்தை சொல்லியிருக்கவேயில்லை
மற்றுமொரு மழை
வரக்காத்திருகிறேன்

மெல்ல
விரல்கள் நீண்டு
நீர்க்கோடுகளாய்
எலும்புகள் உடைந்து
ரத்தம் நிறமாறி
வியர்வை துவாரங்களில்
கசிகிறது நீரென

அடைக்கப்படாத
நீர்ப்பையென தளர்ந்து
தரையெங்கும் விரிந்து
பலமாய் பெய்தோய்கிறேன் பெருமொரு மழையாய்.

Sunday, December 6, 2009

பிழை திருத்தம்..

விழித்தெழுந்த
விடியற்காலை பொழுதொன்றில்
ஒழுங்கில்லாது கிடக்கின்றது
உன் நினைவு..
அள்ளிக்கூட்டி அறையெங்கும்
உன்னை இல்லாது செய்ய வேண்டும்
சொப்பனங்களில்
நீ பேசிய வார்த்தைகளின்
ஏகாந்த சுவைக்குள்
காணாது போன என் உயிரை
கண்டெடுக்கவேண்டும்..
மலராத மண்தோட்டம் ஒன்றுக்குள்
உன்னை விதைத்தாகவேண்டும்..
அலையலையாய் அல்லாடிக்களைக்கின்ற
இறகுகளிடத்தில் உன்கதை
சொல்லாதிருக்க செய்யவேண்டும்..
தரப்படாத
உனது முத்தங்களுக்காய்
தடித்த எனது உதடுகளை
இந்த அதிகாலை பனிமேடுகளில்
பதியம் செய்யவேண்டும் ..
கண்கள் திறக்கையில்
எனது ஆடைகள்
நீக்கப்பட்டு....
அவைகளை களவாடியும்
போனவன் நீ..
அத்தனையும் அழித்தாயிற்று...
முற்றம் வந்து முந்தியதினம்
தன்பசி முறையிட்டு போன
காகத்திற்கு உன் காதலை தூவிவிட்டேன்
தின்று தீர்க்கிறது...
அவ்விடம் மெல்ல மெல்ல
நிர்வாணமாகிறது
மீதம் நான் மட்டும்