Saturday, February 27, 2010

பிரகடனத்தூரிகைகள்

தவறவிட்டிருந்த
உன்னதமானதொரு
காதல்
வந்த பாதையறியாது
சுழல்கிறது
அவனிடமிருந்து அவளுக்கும்
அவளிடமிருந்து அவனுக்கும்
தனித்த தூரிகையின்
ஓவியப்பிரகடனத்தை
புரிபடாது

பிளவுபட்டிருந்த
சுவற்றுக்குள்
பல்லாயிரக்கணக்கான
எறும்புகள்
தன்தீனிக்காதலை
சுமந்து
அந்தரவெளியில்
அலைந்து தனதேயான
இணைத்தேடி
பிடிக்கின்றது

காமம் தணித்த
எறும்புகளில் சில
தாங்கொணாத்துயரத்தில்
அவனும்
அவளுமாய்
திரும்புகின்றது அள்ளப்பெறாத
காதலோடு

Wednesday, February 17, 2010

மண் மூடிய வேர்கள்

தொடர் பதிவை எழுத அழைத்த முத்துக்காவுக்கு நன்றி.

எழுதப்பட்டிருக்காத நிஜங்களை நினைவுகளில் தேடித் திரிகையில்தான் எவையெவைகளையெல்லாம் கடந்திருக்கிறோமென்பதும், வாழ்வியல்பென வதங்கி ஒதுங்கிய அந்நினைவுகள் சொல்லித் தந்திருப்பதும் வாழ்க்கையைத்தானென்பதும் புரியத்தொடங்குகிறது.

டயரி எழுதும் எண்ணம் பெரிதாக இருந்தாலும் எழுதும்படியான நிகழ்வுகளின் தொகுப்பு வசியமற்றதாகவே இருந்தது. எழுதுவதைப் பற்றி என் ஆசிரியர் சிதம்பரம், 'ஏண்டா முடிஞ்சிபோன விஷயத்த எழுதுறிங்க. திட்டங்களை எழுதுங்க. குறிப்பிட்ட அந்த நாளில திட்டத்தோட எந்தப்பகுதில இருக்கிங்கனு பாருங்க' என்றிருந்தார்.

இன்று வரை எந்தவிதமான திட்டங்களோ, நிகழ்வுகளோ எழுதப்படாமல் நண்பர்களின் முகவரியை சுமந்தே எனது டயரிகள் கிடக்கின்றன.

பதின்ம வயதுகள்.... வண்ணத்துப்பூச்சிகளின் சிறகிலேறி வட்டமடிக்கும் நாட்கள். எந்தத் துயரமும் துருவி போட்டிராத கணங்கள். என்னொத்த வயதுகளில் தத்தம் குடும்பத்துடன் குதூகலித்து கொண்டிருந்தாலும் அந்தத் தோழமைகள் நினைவுகளில் மின்னி மறைவது ரெட்டை சடை முகங்களாகவே.

”விதவையான ஏடுகளை
கண்டால் முத்தமிட்டு
மறு வாழ்வளிக்கும் எங்களின்
பேனாக்கள்”

எனது கணக்கு நோட்டில் எழுதி இருப்பதை பார்த்து ஜெயா, ”ஏய்! இங்க பாருடி. இவ கவிதை எழுதி இருக்கா”

முதல் பெஞ்சில் தொடங்கி ஒட்டுமொத்த அறுபது மாணவர்கள் உதடுகளிலும் முணுமுணுத்து ஆசிரியர் வரை சென்று உற்சாகப்படுத்தி, அளவற்ற திளைப்புகளில் களித்திருக்கச்செய்த அந்நாள் தொடங்கி ஆர்வக்கோளாறில் எழுதத் தொடங்கி இருந்தேன். சில கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்தது. தோழிகள் கூடத்தில் சிறப்புத்தகுதி பெற்றவளாய் மதிப்புற்றிருந்தேன்.

பள்ளிக்குள் முதலில் வருவது நானும் ஜெயாவும்தான். அவள் என் நெருங்கின தோழி.

அடர்த்தியான சலசலப்புகள் ஒருமித்த குரலை வெளிப்படுத்துகிற வகுப்பறைகளில் யாருமற்ற மௌனம் பிடிக்குமெனக்கு. வளாகம் முழுவதுமாய் உதிர்கின்ற இலைகள் நிரம்பிய, இரண்டுக்கும் அதிகமான கிளைக்கைகளை கொண்டு அப்பள்ளியை முழுவதுமாய் அணைக்க முயன்றபடியே, ஆண்டுகள் பலவாகி நீண்டு கொண்டிருந்தது அம்மரம்.

வேனல் காலங்களில் உஷ்ணமும் நெருக்கமும் கொப்பளிக்கின்ற வியர்வைக்கு பயந்து, ஸ்டெல்லா டீச்சர் பெரும்பாலும் அம்மரத்தடியில் பாடம் நடத்துவார். ஜில்லென வீசும் அக்காற்றில் துவைந்த தேகம் சிலிர்க்கும். ஸ்டெல்லா டீச்சர் அழகான பெண்மணி. அலங்காரமும் விதவிதமான சேலைகளையும் ரசிக்காத நாளில்லை. பாடத்தை கவனித்திருப்பது தவிர்த்து மரத்தினின்று இயல்பாய் விடுபடுகின்ற இலை எண்ணுவதும், அவ்விலைகளை முன்னமர்ந்திருப்பவளின் சடையில் திணிப்பதும், மண்ணில் கோலமிட்டு கலைப்பதுமாய் கடந்திருக்கும் வகுப்பு. பெருத்து அகன்றிருக்கும் மரத்தின் நிழலோடு எனது சிநேகம் புத்தகத்தில் பதுங்கிய இலைகளுக்கே தெரிந்திருக்கும்.

அது ஒரு கிருத்துவ பள்ளி. வகுப்புகள் அதிகப்படுத்த வேண்டுமென்ற அறிவிப்புக்கு பின்னொரு நாளில் மரத்தை வெட்டத் திட்டமிட்டு, கோடாரி கொலை செய்ய நாளும் குறிக்கப்பட்டது. ஒரு சனிக்கிழமையில் வெட்டுப்படுகின்ற சத்தம் கேட்டு அதிர்ந்தது என்னை போலவே மரமும். ஜன்னலோரமமர்ந்து கண்முன் வன்முறையொன்று நடக்க பார்த்திருக்கும் படபடப்போடு நிம்மதியற்று அழுதேன். முறிவின் அகோர கதறலுக்கு மத்தியில் உடைந்த முட்டைகளுக்காய் பிறண்டு அழும் சிட்டுக்குருவியைப் போல துடித்திருந்தேன். அதீத பிரியங்களை மறுத்திருந்த அந்நிலத்தில் முளைத்திருக்காதிருந்திருக்கலாம்.

ஊன்றி உயிர்த்து தீராத வேட்கையோடு தந்த நிழலின் தேவை என்றைக்கும் நிறைவுறாது. நிலம்பற்றி கிளைத்த அம்மரத்தின் ஆயுள் அறுக்கபடுகின்றது. சாய்ந்து தளர்ந்து நிலம் பற்றிப் பிடித்திருந்ததா இல்லை வேர்கள் அந்நிலத்தைப் பற்றி படர்ந்ததா. வெகுநாளாக என்னை உலுக்கிய விபத்து அந்த மரத்தின் மரணம். யாருடைய பயணத்திற்கும் விருப்பமானதொரு கையசைவை தந்து கொண்டிருந்த இலைகளின் கைநீட்டல்களுக்கு தாவிச்செல்கிறது மனம்.

தோழிகள் கேலி செய்திருந்தனர். ஜெயா மட்டும் என்னை சமாதானப்படுத்த முயன்று ஸ்டெல்லா டீச்சரிடம், ”எப்பப் பாத்தாலும் அதையே பேசி கஷ்டப்படறா டீச்சர். சொன்னா கேக்கவே மாட்டேன்றா”என்றாள். நான் எதுவும் பேசாதிருந்தேன்.

அன்று மாலை வகுப்பு முடிந்ததும் ஸ்டெல்லா டீச்சர் என்னை அழைத்து, ”ஏண்டி இந்த மரம் போனா அதுக்காக அழறதா. இன்னொரு மரம் உன்னால முடிஞ்சா நடு''' என்றார். சற்று ஆசுவாசமாயிற்று. மறுநாள் வேப்பங்கன்று ஒன்றை பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஓரமாக நட்டு, தினமும் கவனித்து வந்தேன். அது மெல்ல தன் ஜீவனை நிலைப்படுத்திக் கொண்டிருந்தது. பள்ளி படிப்பு முடிந்து சக தோழிகளை பிரிகையில், அம்மரம் பூப்படைய காத்திருக்கும் பெண்ணொருத்தியின் சாயலில் மிளிர்ந்திருந்தது.

இனி யாரும் அதை தட்டிக் கொடுத்து வளர்க்கவேண்டிய அவசியமிருக்காது. வெட்டி முறிக்காதிருந்தாலே போதுமானது என முத்தமிட்டு விலகினேன்.

எத்தனையோ வருடங்களுக்கு பிறகு ஜெயாவை ஒரு மருத்துவ மனையில் சந்திக்க நேர்ந்தது. தடித்திருந்தாள். இரண்டு குழந்தைகளோடு உறவினர் யாரையோ மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கூறினாள். மற்றத் தோழிகளைப் பற்றி விசாரிக்கையில், சட்டென அந்த வேப்பமரம் இலையுதிர்த்து சென்றது. அந்த பள்ளிக்கு அருகிலேயே அவள் வீடு. ”இப்பவும் ஏதாவது எழுதுறியாடி. அப்புறம் நீ வச்ச மரம் ரொம்ப பெருசாயிடுச்சுடி”

அந்த மரத்தில் முன்னாள் மாணவியென்று எனது பெயரைத் தாங்கியபடியும் இன்னும் சில மரங்கள் நடப்பட்டு அதில் அந்த வருட மாணவிகளின் பெயரை எழுதி இருப்பதாகவும் சொன்னாள்.அவள் மகள் அந்த பள்ளியில்தான் படிப்பதாகவும் உன்னைப்பற்றியும் அந்த மரத்தை பற்றியும் அவளிடம் அடிக்கடி பேசுவதாகவும் கூறினாள்.

”அதெல்லாம் ஒரு காலம்டி" அந்த வார்த்தையில் தற்போதைய வாழ்விற்கான சலிப்பு அடைபட்டிருந்தது.

உள்ளத்தில் உருபெற்று அகண்டு பெருத்திருந்த அம்மரம் நிலத்தில் நிலைத்திருப்பது ஆனந்தமாக இருந்தது. எல்லாமும் மாறிப் போயிருந்த சூழலில், என் வருகைக்காக காத்திருக்கும் அதே இரண்டுக்கும் மேற்ப்பட்ட கைகளோடு. மனம்கொள்ளாது ஊடுருவிய வேர்களோடு அழுந்துகிறது நிர்பந்தமற்ற நேசம். மெல்ல உதிர்கின்றது. மெல்ல துளிர்க்கின்றது. எத்தனையோ நினைவுகளிலிருந்து தனித்திருந்த இந்த நிகழ்ச்சி மனத்தின் மாறாத பருவகாலம். அதே பள்ளியில் இன்னும் மாணவியாகவே எனை சுமந்தொரு மரம் காத்திருக்கின்றது. அடித்துப் பெய்த மழையில் நீரற்ற கிணற்றுக்குள் மெல்ல குவியும் பச்சயம் போல என்றும் என்னுள் ஈரமாகவே இந்நினைவுகளிருக்கும்.

பதின்ம நினைவுகளினைத் தொடர கவிஞர். திருமதி லாவண்யா சுந்தரராஜனை அழைக்கின்றேன்.

Wednesday, February 10, 2010

ப்ராப்தம்

மூங்கில்
இடுக்கினூடே
பற்றிப் பிடித்த கரையான்
அசுவாரசியமற்று
பணித்த பாதையிலேயே
திரும்புகிறது
அரித்துப்பிளந்த
அம்மூங்கில்
மெல்ல முறிய
குற்றமற்றதொரு
மரணம் நிகழ்கிறது

Saturday, February 6, 2010

தொடர்வினை

தொடர்ந்திருந்த நெடுந்துயரத்தை
வெகுநாளாய் மறந்திருக்கிறேன்
என்பது நினைவில் வர
தணல் தரை நோக்கி
சாடித் தெறித்தவைகள்
ஒழுங்கற்று பரவத் தொடங்கியதும்
விளிம்புகளுக்கப்பால்
நேசிக்கப்படவிருந்த
இதயத்தினின்று வலிகள்
தன்னை தளர்த்தி
விலகியிருக்க
அதற்கான கூடொன்றை
நிர்ணைத்த மரமொன்று
அழுத்தம் கூட்டி
ஆகச்சிறு கல்லறைக்குள்
நசுக்கிப் போட்டதில்
இற்று துண்டாகி விழுந்த
சதைத் துணுக்குகள்
வலியையோ
பசியையோ உணராது
முழுவதுமாய் ஜீவனற்ற
அவ்வாழ்வின் பொருள் தேடி
அலைகிறது
மதபோதகனின் சொற்களைப்போல
அந்தரத்தில்..