Saturday, January 16, 2010

மீண்ட உயிர்ப்பு

அரைஞான் கயிற்றுக்குள்
அடைப்பட்டிருந்த
அரைக்கால் சட்டை துவாரங்களில்
தெரியும் நிர்வாணம்
வறண்ட தசை புறமெங்கும்
வழிகின்ற உதிரம்
துளி பிரக்ஞைகளேதுமின்றி
மெல்ல சொல்லட்கரிய
வார்த்தைச்சாவிகளோடு
மென்காற்று மண்டலங்களை
காலம் உள் நுழைக்கின்றது.
ஆடை துவைத்துக்குளித்த

அகண்ட இரவில்
மௌனமாய் நகர்த்தப்பட்டிருந்த
கனவு பரிமாறிய முத்தத்தில்
மடிந்த நாவின் நீளம்
உன்னெட்டும் தூரம்
துழாவி
அடிவயிற்றில் அழுந்திய ரேகைகள்
முடிந்திருந்த ஒற்றை தின பயணத்தைச்
சொல்ல முயல்கையில்
கட்டியெழுப்பியசாரைத்தூண்களென
விம்மி தளும்பிய தேம்பல்கள்.
உன் தேகம் நனைத்த

நம் இருத்தல்களையும் நிரப்பிய
தீர்க்கமானதொரு கணத்தில்
ஆள்துயரங்களனைத்தும்
அவ்வறை ஓரங்களில்
இளைப்பாறியது
புதருக்குள் மறைத்திருந்த
நிராசைகள் ஒவ்வொன்றாய்
கொத்தி தின்ற காகம்
களைத்து
வெள்ளை வெளிச்சம் தெளிகையில்
பிரம்மாண்டமானவிரு
கருத்த சிறகுகள்
முளைத்திருக்கக்க‌ண்டேன் முதுகில்.
இன்னும் நான் மரித்திருக்கவில்லை.

6 comments:

பாலா said...

ம்!!!!

நட்புடன் ஜமால் said...

புதருக்குள் மறைத்திருந்த
நிராசைகள் ஒவ்வொன்றாய்
கொத்தி தின்ற காக-ம்!!!

Ganesh Gopalasubramanian said...

அரைஞான் கயிறு, அரைக்கால் சட்டை துவாரம், ஆடை துவைத்துக்குளித்த இரவு, அடிவயிற்றில் அழுந்திய ரேகை.

படிமங்கள் விரவிக்கிடக்கின்றன! கவிதானுபவம் அற்புதம்!

”நாவின் நீளம் உன்னெட்டும் தூரம் துழாவியதைச்” சொல்ல நினைக்கையிலேயே தேம்பல்கள்! ம்ம்

”கொத்தி தின்ற காகமும்”, ”கருத்த சிறகுகளும்” கவிதையின் ஆழத்தைக் கூட்டுகின்றன.

அது சரி! இந்தக் காகம் உருவகம் ஏன்? கருத்த சிறகுகளுக்காகவா? காகங்கள் அரியவை அல்லவே! கவிதை சொல்வது அரிய பறவை ஒன்றையல்லவா?

Anonymous said...

சான்சே இல்லை :-)

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு யாழினி, அடர்வான ஆழமான உணர்வுமயமான கவிதை.

கமலேஷ் said...

மிக ஆழமான தேடல் கொண்ட கவிதை...அடர்த்தியான எழுத்து மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ சொல்கிறது...வாழ்த்துக்கள்.. தொடருங்கள்...