Wednesday, July 7, 2010

மூன்று கவிதைகள்

பள்ளத்தில் மீந்திருந்த
மழை நீரில்
மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது
இரு மீன்கள்.
இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர்
மெல்ல வற்றியதும்
இலைகள் சிறகாகி
பறக்கத்தொடங்கியது
மீன்கள்

********

துயரங்களும் துயில்தல்களும்
ஆழத்தளும்பிய நீரில் நீந்துகிறது.
பற்றாக்குறையின் பிரதிபலிப்புகளில்
தன்னைப் பார்த்திருந்த
பரிதி
சடங்குப்பெண்ணின்
சாயலைக்கொண்டு
மூழ்கவெண்ணுகிறது.

********

காத்திருக்கக் கற்றுக்கொண்ட
காலச்சிறைக்குள்
எந்த அற்றத்திலிருந்தோ
நீண்டு வந்த வேரின்
கிளைகளில் முடிந்திருக்கிறேன்
கனவுகளை
அவ்வண்ணமாகவே..

3 comments:

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு யாழினி

குறிப்பா முதல் கவிதை தரும் கவித்துவ சிலிர்ப்பு அருமை. மிகச்சிறந்த படிமம்.

//மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது
இரு மீன்கள். //

//இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர் //

அருமையான காட்சி

//மெல்ல வற்றியதும்
இலைகள் சிறகாகி
பறக்கத்தொடங்கியது
மீன்கள் //

கவித்துவம் நிரம்பிய புனைவு
ஆஹா,,,,,,,,

வற்றும் பள்ளமும் மரணத்தை நெருங்கும் மீன்களும் நிழலோடு உதிர்ந்து மூழ்கும் இலைகளும் இலைகள் சிறகாகி பறக்கும் மீன்களும் என்னென்னவாகவோ தெரிகிறது. ஒவ்வொரு வரியிலும் வேறுவேறு அர்த்தங்களைப் பெறுகிறேன் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும்

இந்தக் கவிதை தரும் அனுபவம் மிகச்சிறந்ததாயிருக்கிறது. உங்கள் கவிதைகளில் மிகச்சிறந்த கவிதையாக தோன்றுகிறது எனக்கு இது.

சென்ஷி said...

//
இந்தக் கவிதை தரும் அனுபவம் மிகச்சிறந்ததாயிருக்கிறது. உங்கள் கவிதைகளில் மிகச்சிறந்த கவிதையாக தோன்றுகிறது எனக்கு இது//

எனக்கும்....

Ganesh Gopalasubramanian said...

//எந்த அற்றத்திலிருந்தோ
நீண்டு வந்த வேரின்
கிளைகளில் முடிந்திருக்கிறேன்
கனவுகளை //

பிரமாதம். ”வேரின் கிளை” சொல்லாடல் அருமை.

//இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர் //
அருமை.