நேற்று காலை தங்கை வீட்டிற்கு வந்திருந்த உறவினர் ஒருவர், ஊருக்கு திரும்புவதை சொல்வதற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். டீயுடன் நலன் விசாரிப்புகளுமாக பேச்சு நீண்டு கொண்டிருந்தது. ஆஹிலுக்கு கைக்கெட்டும் உயரத்தில் புத்தகங்கள் இருப்பதால் அவனிடம் விளையாட ஆளின்றி, அவனுக்கு ஓய்வு தேவைப்படும்போது ஏதேனும் புத்தகம் ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு அப்புத்தக ஏடுகளிடம் பேசத்தொடங்கிவிடுவான். இப்படி ஜெயமோகன், சுகுமாரன், பிரான்ஸிஸ்கிருபா, தேவதேவன் வழியே..... கடைசியாக வாங்கப்படும் புத்தகம் அவனுக்கு நெருக்கமாகிவிடும். இன்று அவனது கையில் மாட்டியவர் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசஃப். குடை நிழலை விரித்துக்கொண்டு வழக்கம்போல் புத்தகத்துடன் உரையாடிக்கொண்டிருந்தான் . வந்திருந்த பெரியவர் “ஆஹில் வாங்க என்ன புக் அது? தாத்தாக்கு குடுங்க’ என்றதும் அவரது கையில் அந்த புத்தகத்தை கொடுத்தான் .
வாங்கியவர் ‘ங்கொப்புரான !!’ என்று ஆச்சரியமாக அந்த புத்தகத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்து கண்களை மூடிக்கொண்டார். நான் பதறி, என்னாச்சுங்கய்யா என்றேன் . ’தெளிவத்தைம்மா’ .ஆச்சரியம் மாறாத கண்களோடு வார்த்தையற்றிருந்தார். விஷ்ணுபுரம் விருது இந்த முறை இவருக்குதான் கிடைச்சிருக்குய்யா . நா இப்பவரைக்கும் இவர் கதைய வாசிச்சதில்ல. இப்பதான் வாங்கினேன் - தெளிவத்தை புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தார் - அநேகமாக நான் பேசியது அவருக்கு கேட்டிருந்தால் ஆச்சரியம்தான்.
’இவர் என்னோட ஆசிரியர்மா. இவரோட எழுத்துக்குன்னு ஒரு கூட்டமே அமைச்சி கொண்டாடியிருக்கோம் இந்த மனுஷனை’ தெளிவத்தை ஜோசஃப் எழுதிய கதைகள் அத்தனையும் சொல்லிக்கொண்டும் அந்த கதாபாத்திரங்களை தன் சொந்தங்களைப்போல பாவித்த காலமும் உண்டெனக் கூறி நெகிழ்ந்தார்.
தேயிலைத்தொழிலாளர்களின் வாழ்வைக் குறித்தான தெளிவத்தையின் எழுத்தில் லயித்து போனதன் அங்கமாய் தெரிந்த பெரியவரின் கைகளில், ஒரு பச்சிளம் குழந்தையப் போன்றதொரு பாவிப்போடு விரித்திருந்தார் குடை நிழலை.
1957வாக்கில் மொறக்கொல்லை பள்ளியில் ஆசிரியராக கிட்டத்தட்ட ஏழாண்டு காலம் தெளிவத்தை ஜோசஃப் பணியாற்றிக்கொண்டிருந்த போது, அப்பள்ளியில் அவரது மாணவன் தங்கையா . இன்று அறுபது வயதுக்கு சொந்தக்காரர் . நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் தெளிவத்தையை நினைத்து பூரித்து போகிறார். பள்ளிக்காலங்களின் அனுதின நிகழ்வுகளை பகிருவதில் பூரிப்பில் அவரது பிராயம் குறைந்தது. விடுமுறை நாட்களில் நடந்தே மலைமேடுகளில் வேடிக்கை காட்டுவதற்காகவே அழைத்துச் சென்றதையும். பாட்டு நடனம் விளையாட்டுப்போட்டியென மாணவர்களுக்கொரு தூண்டுகோல் தெளிவத்தை அவர்கள். குறும்புத்தனங்களுக்காய் வாங்கிய பிரம்படிகளை நினைத்து, உடலை சுருக்கி சிரித்துக் கொண்டார் தங்கய்யா. தனது மாணவர்களை கட்டுப்பாட்டோடும் அன்போடும் அணுகிருக்கிறார் தெளிவத்தை.
தங்கையா தனது வாழ்க்கைக்கும் ஆசானாகவே தெளிவத்தை ஜோசஃபை கருதினார். அவரது கதைகள் மூலம் தேயிலை பணியாளர்களின் நெருக்கடிகளையும் , தொழிலாளர்கள் ,தங்களின் வாழ்க்கையை கட்டுக்குள் வைத்திருப்பதே தெரியாமல் , தங்களது சுயகவுரவம் இழந்திருப்பதையும் உணராதிருப்பதை விளக்கிச் சொல்ல எண்ணினார் . இதற்கு உறுதுணையாக பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சீர்திருத்தம் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார்கள். தொழிலாளர்களுக்கு கல்வியறிவை மேம்படுத்த பெரும்பாடுபட்டனர். அதன் மூலம் திண்ணை பள்ளிக்கூடம் என்ற ஒன்றை ஆரம்பித்து படிக்கவியலாத குழந்தைகளுக்கு ஆங்காங்கே பொது இடங்களில் இலவசக்கல்வி அளிக்கப்பட்டது. இப்படி எத்தனையோ செய்தும் இன்னும் பூரணமாக ஏற்படாத மாற்றத்திற்கு சலித்துக்கொண்டார் தங்கைய்யா.
வாழ்க்கை தங்களை மலையகத்திலிருந்தும் விரட்டியது. எல்லாம் மறந்து போன நிலையில், இன்றைய தெளிவத்தை பற்றின நினைவுகள் திடகாத்திரமான, அன்றைய சீர்திருத்த இளைஞனாக்கியிருந்தது தங்கய்யாவை. தெளிவத்தை பற்றி அவர் பேசப்பேச அவர் கிளம்பவேண்டுமென்ற எண்ணம் தற்காலிகமாக மறந்து, பின் நேரங்கழிதலிலிருந்த கட்டாயத்தின் பேரில் விடைபெற்றார். அவரை வழி அனுப்பிவிட்டு சென்ஷியோடு இந்த மகிழ்வான சந்திப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, சேமித்து வைத்த புதிய காசுகள் கொண்ட உண்டியலை சுமந்தலையும் குழந்தையாய் கனத்தது உடல். வீடு முழுக்க தங்கய்யாவின் பேச்சில் மலர்ந்த மலையகத் தேயிலை வாசனை. சந்தோஷமாய் உணர்வுகளை சென்ஷியிடம் பகிர்ந்து கொண்டிருக்கும்போது, அலைபேசி அழைக்க மறுமுனையில் ’’ம்ம்மா... நாந்தான்ம்மா தங்கைய்யா... இன்னைக்கு நா ஊருக்குப் போகல. வந்துகிட்டிருக்கேம்மா வீட்டுக்குதான்’ என்றவர் ’நிறய பேசுவோம்மா’ என்றார் . சரியென்று வீட்டை ஒதுங்க வைத்தேன். வருவது தேயிலைத் தோட்டமாயிற்றே . ஒரு எழுத்தாளர் இந்தளவிற்கு ஒரு வாசகனை கையகப்படுத்தவியலுமா..? எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
விஷ்ணுபுரம் விருது விழாவில் தெளிவத்தை ஜோசஃபை கண்டிருக்கிறேன். நான் தீவிர வாசிப்புள்ளவளாக இல்லையென்றாலும் விஷ்ணுபுரம் விருது தகுந்தவருக்கு கிடைக்கும் என்பது நம்பகமானது. சென்ஷி மற்றும் நண்பர்கள் ஜெயமோகன் மீது கொண்டிருக்கும் மரியாதை அவரது படைப்புகளின் அடர்த்தியை எனக்கு உணர்த்தியது. அதுவே அந்த விருது குழுமத்திடமும் உண்டு. ஒவ்வொரு வருடமும் எதுவும் விளங்காத கடைக்குட்டியாக சென்றுகொண்டிருக்கிறேன். புது மழையில் நனைந்த வாசனையோடே திரும்புவேன். போன வருடம் கவிஞர் தேவதேவனுக்கு விருது வழங்கும்போது கல்பற்றா நாராயணன் பேசியது மனதை பற்றிக்கொண்டதால் மற்ற யாருடைய பேச்சுகளும் நினைவில் நிறுத்தவோ கவனிக்கவோ முடியவில்லை. இந்த வருடம் அழைப்பிதழ் பட்டியலில் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு மிகுந்த எதிர்பார்ப்பை தந்து வரவியலாது போனார்.
விடுப்புகளில் சென்ஷி வந்தால் ஜெ.மோ. புத்தகங்களை கண்கொட்டாமல் வாசித்து கொண்டிருக்கும்போது எனக்கு ஆத்திரமாக இருக்கும். இருக்கும் புத்தகங்களை அட்டைப்படம் பார்க்க மட்டும் உரிமை தரப்படும் என்ற கட்டளையோடு கடந்து விடும் அவரது விடுப்பும். முப்பது நாட்கள் ஓய்விற்கு பிறகு ஊருக்கு கிளம்பியதும், கலைத்த நினைவுகளோடு புத்தகங்கள அடுக்கி கொண்டிருந்தேன். சென்ஷியிடமிருந்து பறித்து போட்ட ஜெ.மோ.வின் நூறு நாற்காலிகள் ஒரு கலெக்டரின் உண்மைக்கதை புத்தகத்தை வாசித்தேன். வாசித்துகொண்டிருக்கும்போதே சென்ஷியிடமிருந்து அந்த புத்தகத்தைப் பறித்ததற்காய் வருந்தினேன். எவ்வளவு ஈர்ப்பு. அழுத்தம்.. வாழ்வின் உண்மையான பிரதிபலிப்பு. அந்த சூழலை கடக்க மற்றுமொரு ஜெ.மோ புத்தகமே சரியான வழியென ஆயிற்று . அப்படியே நீண்டது.
விஷ்ணுபுரம் விருது விழாவில் இம்முறை ஜெ.மோ. பேசிய ஒரு வாக்கியம் இன்னும் நீங்காமல் மனதில் ஒலிக்கிறது . ‘யானையோடப் பழகி பாருங்க அதைக் கொல்ல மனசு வராது’’ இந்த வார்த்தையைப் போலவே ஆனது எனது மனநிலையும் . அவரது புத்தகம் வாசிக்கத் தொடங்கும்போதெல்லாம் அந்த வாக்கியம் நினைவுக்கு வரத்தொடங்கியது ஒவ்வொரு முடிவிலும். தெளிவத்தை ஜோசஃப் அவருக்கு விருது என்ற அறிக்கையிலிருந்து தெளிவத்தையை அறிமுகம் செய்ய சிறிது கால அவகாசம் தேவையாகி இருக்கும். பெரும்பாலும் தேயிலை மலையக மக்களின் நெருக்கமற்ற பாதையில் நாம் பயணித்து கொண்டிருப்பதால் அந்த எழுத்தின் வலு புரியாமல் இருந்தது. இன்னும் வாசிக்கவுமில்லாமல் குடை நிழல் மடித்தே வைக்கப்பட்டிருக்கிறது. இன்று தங்கையாவுக்கு அந்த புத்தகத்தை நினைவாக அளித்தேன்.
தங்கையா தெளிவத்தை பற்றியும் அவரோடு வாழ்ந்த காலங்களை பற்றியும் என்னுடன் பகிர்ந்து கொண்டது மகிழ்வானதாகயிருந்தது. தெளிவத்தை ஜோசஃபின் எழுத்துக்கள் முழுமையாய் ஊடுருவி வாழ்ந்த இம்மனிதனை ஆராதிக்கிறேன் . ஒரு மணிநேரம் உரையாடல் போதாதென அந்த ஆவல் மிகுந்து, வன நாட்களைப் பகிர ஊருக்கு திரும்பப் போய் கொண்டிருந்த ஒருவரை தெளிவத்தையின் எழுத்து, பயணத்திலிருந்து இளமை சூழலுக்கே திரும்ப ஒரு தேயிலைத்தோட்டமாக மாற்றியதை என்னவென்று சொல்ல. இப்படி வாழ்வோடும் தொடர்ந்த எழுத்தை அறிமுகமாக்கி கவுரவமும் அளிக்கின்ற ஜெயமோகன் மீதான அன்பும் மரியாதையும் அதிகரிக்கிறது.
’பழகிப் பாருங்க யானைய கொல்லவே முடியாது.’’